போதைப்பொருள் ரசாயனம் குறித்த குற்றச்சாட்டில் சரணடைந்த சம்பத் மனம்பேரி தொடர்பான வழக்கில் முன்னிலையான ஒரு சட்டத்தரணியிடமிருந்து துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மித்தேனியவில் கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கும், அப்பகுதியில் “ஐஸ்” எனப்படும் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு ரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கும் நேற்று(17.09) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்போது, மேற்கு வடக்கு குற்றப்பிரிவின் காவலில் உள்ள பெக்கோ சமன் மற்றும் தம்பரி லஹிரு ஆகியோரும் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்ததால் அதனால் நீதிமன்ற வளாகம் பலத்த பாதுகாப்புடன் சூழப்பட்டிருந்தது.
கடுமையான சோதனை
அத்துடன், நீதிமன்றத்திற்கு வந்த சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அந்த நேரத்தில், ஒரு சட்டத்தரணியின் காரில் பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்று, 15 தோட்டாக்கள் நிரம்பிய மெகசின் மற்றும் மேலதிகமாக 5 உயிர் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையில், அந்த துப்பாக்கி சட்டபூர்வமாக சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
காவல்துறை எடுத்த முடிவு
எனினும், நீதிமன்ற பாதுகாப்பு காரணமாக காவல்துறை அதிகாரிகள் இதை வலஸ்முல்ல காவல்துறை பொறுப்பதிகாரி, தலைமை ஆய்வாளர் கிங்ஸ்லி ஹேரத்திடம் அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வழக்கு முடியும் வரை அந்த துப்பாக்கி காவலில் வைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

