Courtesy: Sivaa Mayuri
அண்மையில் விபத்திற்குள்ளான முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் வாகனத்தை காணொளிப்படுத்திய இளைஞருக்கு எதிரான பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கைக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு நேற்று (30) பதிலளித்த அமைச்சர் ஹேரத், சம்பவம் நடந்த போது வாகனத்திற்குள் மூன்று உரிமம் பெற்ற ஆயுதங்கள் இருந்தாகவும் இதன் காரணமாகவே பொதுமக்கள் அதனை காணொளிப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இந்தநிலையில், 2024 நவம்பர் 07ஆம் திகதிக்கு முன்னர் உரிமம் பெற்ற ஆயுதங்கள் உட்பட அனைவரும் தங்களுடைய ஆயுதங்களை மீள ஒப்படைக்கவேண்டும்.
பொலிஸாரின் நடவடிக்கை
இது தொடர்பாக தேவையான மீளாய்வு மற்றும் அறிக்கைகளைப் பெற்ற பின்னர் அவை திருப்பித் தரப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சிலர் ஆயுதங்களை இன்னும் தரவில்லை என்று அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார். வாகனத்தை காணொளி எடுத்த ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் மிரட்டியது வெளிப்படையானது. அவர் செய்த செயல் தவறானது என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளின் இத்தகைய நடத்தை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறிய அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வாரத்தில், குருநாகல் வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபென்டர் வாகனத்தை காணொளி எடுத்த இளைஞர் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி, பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே அமைச்சர் ஹேரத்தின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.