ஹாட்லி மைந்தர்களின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். வடமராட்சி, பருத்தித்துறை
– இன்பர்சிட்டி கடற்கரையில் அவர்களது குடும்பத்தவர், நண்பர்கள் மற்றும்
ஆசிரியர்களால் நேற்று உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
கல்விச் செயற்பாட்டின் நிமித்தம் இன்பர்சிட்டி கடற்கரைப் பகுதியில் 1999ஆம்
ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி, கடல்வள ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடல்
அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள் நான்கு பேரின் 26ஆம் ஆண்டு நினைவேந்தல்
நிகழ்வும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீட மாணவனாகக் கல்வி கற்று
வந்த வேளை தொடருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனின் 21ஆம் ஆண்டு ஆண்டு
நினைவேந்தல் நிகழ்வும் நேற்று காலை 9 மணியளவில் இன்பர்சிட்டி கடற்கரையில்
உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்
மாணவர்களின் திருவுருவப் படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவு
வகைகள் படையலிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஹாட்லிக்
கல்லூரியின் முன்னாள் அதிபர் தம்பையா கலைச்செல்வன், உயிரிழந்த மாணவர்களின்
குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர் தூவி, சுடரேற்றி நினைவு
வணக்கம் செலுத்தினார்கள்.









