நுவரெலியா – ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று (11) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்ந்து வருகிறது.
கருத்துக்களில் உண்மை இல்லை
இதனால் பல இடங்களில் மண்மேடு, கற்பாறைகள் சரிந்து வீழ்வதற்கு அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால் நுவரெலியா – கண்டி வீதியில் இரவில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘திட்வா’ புயலினால் நுவரெலியா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத சில தரப்பினர் வெளியிடும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
மண் சரிவு அனர்த்தம்
இதேவேளை, இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் 13.12.2025 வரை கண்டி, நுவரெலியா, மாத்தளை, கேகாலை மற்றும் பதுளை மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண் சரிவு அனர்த்தம் நிகழ்வதற்கும் வாய்ப்புள்ளது என நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.

