வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இதனை முன்னிட்டு நேற்றைய தினம் திங்கட்கிழமை (28) செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும், கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கோடி கட்டப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
போக்குவரத்து தடை
மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதியும், மாம்பழ திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , சப்பரத் திருவிழா எதிர்வரும் 20ஆம் திதியும், தேர்த் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதியும் , தீர்த்த திருவிழா ஓகஸ்ட் 22ஆம் திகதி காலை இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவம் நிறைவுபெறும்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ் மாநகர சபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் படி, எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரையில் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.


