நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வடமத்திய மாகாணத்தில் (North Central Province) பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று (27) முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவின் (Wasantha Jinadasa) பணிப்புரைக்கு அமைய வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு விடுமுறை
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) கல்வி வலயத்தில் உள்ள இரண்டு பாடசாலைகளை தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.