யாழில் 25000 ரூபா கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர் புறக்கணிக்கப்பட்டு இருந்தாலும் தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு செய்யப்பட்டிருந்தாலும் துறைசார்ந்த அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களுக்கும் நேற்று (06.12.2025) அனுப்பிய கடிதத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது , யாழ்ப்பாண மாவட்டம்
2025.11.21 ஆந் திகதி முதல் ஏற்பட்ட பரவலான பேரழிவின் காரணமாக சேதமடைந்த
வீடுகளை மறுசீரமைக்க ரூபா 25,000.00 உதவித்தொகை வழங்குதல்
மேற்படி விடயம் தொடர்பாக, தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய NDRSC/02/04/10 ஆம் இலக்க
2025.12.02 ஆந் திகதிய கடிதத்தின் பிரகாரம், விடயம் 02 இல்
குறிப்பிடப்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டை வசிப்பதற்கு
ஏற்றதாக மாற்றுவதற்கும், துப்பரவுப்பணிகளை மேற்கொள்வதற்கும், வீட்டு
உபகரணங்களை மீட்டெடுப்பதற்கும், சமூக பொருளாதார அதிர்ச்சிகளை
நிர்வகிப்பதற்கும், ஒவ்வொரு வீட்டிற்கும் ரூபா 25,000.00 உதவித்தொகையை
உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள்
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினுடைய NDRSC/02/04/10 ஆம் இலக்க
2025.12.05 ஆந் திகதிய கடிதத்தில் விடயம் 01 இல் குறிப்பிடப்பட்ட 2025.11.21
ஆந் திகதி முதல் ஏற்பட்ட பேரிடர் காரணமாக முற்றிலும் சேதமடைந்த வீடுகள், பகுதி சேதமடைந்த வீடுகள், வீடுகளுக்கு சேதம் ஏற்படாவிட்டாலும் சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
வீடுகள், இவ் ரூபா 25,000.00 உதவித்தொகையினை பெறுவதற்கு தகுதியானது என்ற
விடயம் தொடர்பிலும் தங்களது கவனம் ஈர்க்கப்படுகின்றது.

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 25,000.00
கொடுப்பனவு வழங்குதல் தொடர்பாக, மேற்குறித்த இரண்டு கடிதங்களிலும்
குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தங்களது பிரதேச செயலாளர்
பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அனர்த்த
நிவாரண சேவைகள் உத்தியோகத்தருக்கு சரியான தெளிவுபடுத்தலை வழங்க வேண்டியது
தங்களது கடமையாகும்.
இவ்வாறான வெள்ள அனர்த்த நிலைமைகளின் போது அனைத்து கிராம
மட்ட அலுவலர்களும் நேரடியாக பிரிவிற்கு சென்று தரவுகளை பெற்றுக்கொள்வதனை
தாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நிவாரணம் மற்றும் கொடுப்பனவு
மேலும் 2025.12.05 ஆந் திகதிய கடிதத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தினை உரிய
முறையில் பூர்த்தி செய்து உறுதிப்படுத்திய வகையில் மேற்படி கொடுப்பனவினை வழங்க
நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவு நிவாரணம் மற்றும்
ரூபா 25,000.00 கொடுப்பனவிற்கு தகுதியான ஒருவர்
புறக்கணிக்கப்பட்டிருந்தாலும், தகுதியற்ற ஒருவரிற்கு வழங்குவதற்கு சிபார்சு
செய்யப்பட்டிருந்தாலும் அதற்கு குறித்த பிரிவிற்குரிய கிராம அலுவலர்,
பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர், பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் மற்றும்
பிரதேச செயலாளர் ஆகியோர் பொறுப்புக்கூற கடமைப்பட்டிருப்பதனால் இவ்விடயங்களில்
தனிப்பட்ட கவனமெடுத்து செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
எனவே உலர் உணவு நிவாரணம் மற்றும் ரூபா 25,000.00 கொடுப்பனவு தொடர்பில்
உரிய அறிவுறுத்தல்களுக்கமைய செயற்படுவதுடன், குறித்த அலுவலர்களை அழைத்து
சரியான தெளிவூட்டலினை வழங்கி ரூபா 25,000.00 கொடுப்பனவைப் பெறுவதற்கு
தகுதியானவர்களின் பெயர்ப் பட்டியலினை இற்றைப்படுத்தி உறுதிசெய்து கிராம
அலுவலர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் தமிழ் மொழியில்
காட்சிப்படுத்தி அதன் மென் பிரதியினை (Soft copy) மாவட்டச் செயலகத்திற்கு
அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
மேற்படி வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பில்
தாங்களும் தங்கள் உத்தியோகத்தர்களும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் சேவைகளை
பாராட்டி நிற்கின்றேன் என்றார்.

