எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு 100,000இற்கும் அதிகமான சட்டவிரோத குடியேற்றவாசிகள் வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை வந்த ரொஹிங்கியா அகதிகள் குழு தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும், “இலங்கையில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக அரசாங்கம் அடையாளம் காணும்.
மியன்மார் அகதிகள்
அண்மையில் 116 ரோஹிங்கியா அகதிகள் படகு மூலம் இலங்கைக்கு வந்துள்ளனர், அவர்கள் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த பயணத்திற்காக குறித்த குழு, மனித கடத்தல்காரர்களுக்கு பாரிய தொகையிலான பணத்தையும் கொடுத்துள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அகதிகளாக இனங்காணப்பட்டால், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச சட்டங்களின்படி செயற்பட அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக அகதிகள் குழுவிற்கு உணவு மற்றும் தண்ணீர் உட்பட தேவையான அனைத்து வசதிகளையும் நாங்கள் வழங்கியுள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.