அனர்த்தங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
அதன்படி,இழப்பீட்டுத் தொகையை 250,000 ரூபாவிலிருந்து ஒரு மில்லியன் ரூபாவாக அதிகரிப்பதற்கு அனுமதிக்கபட்டுள்ளது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வைத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்களுக்கு உதவி
சீரற்ற காலநிலையினால் 18 மாவட்டங்களில் 5,736 குடும்பங்களைச் சேர்ந்த 18,696 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 458 குடும்பங்களைச் சேர்ந்த 1,324 பேர் தற்போது 18 பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் வானிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளன.
நிவாரண சேவை
அத்துடன், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், முப்படையினர், காவல்துறை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் பிற நிவாரண அமைப்புகள் அனைத்தும் அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய அனர்த்த நிவாரண சேவைகளுக்காக 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், இடம்பெயர்ந்தவர்களுக்குத் தினசரி உணவுப் பங்கீட்டுக் கொடுப்பனவுக்காக ஒருவருக்கு 1,800 ரூபாய் தொடக்கம் குடும்ப அளவைப் பொறுத்து நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.