யாழ்ப்பாணத்தின் (Jaffna) பல்வேறு பகுதிகளிலும் அண்மைக் காலமாக நிகழ்நிலை மூலமான நிதி
மோசடி இடம்பெற்று வருகின்றதாகவும் இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நான்கு
இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும்
நடைபெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்நிலை மூலமான நிதி மோசடிகள் பல்வேறு வகையில் இடம்பெற்று
வருகின்றதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பணத்தினை வைப்புச் செய்தல்
இது குறித்து மேலும் தெரியவருகையில், நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு
செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது.
அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை
முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
மக்கள் முதல்
வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில்
அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.
மேலும், வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள்
மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து
மோசடியாளர்களால் பெறப்படுகிறது.
ஊர்காவற்துறை நீதிமன்றம்
பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம்
அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது
வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது.
இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்திலும் இவ்வாறான வழக்குகள் காணப்படுகின்றமையால் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை
நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் பு. கஜிந்தன்