இலங்கையில்,13 வருடக் கல்வியை நிறைவு செய்வதற்கு முன்னரே பாடசாலைகளில் இருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் (Ministry of Education) 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித மற்றும் பௌதிக வளங்களின் விநியோகத்தில் காணப்படும் பாரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக, கல்வி முறைமை மீதான பெற்றோரின் நம்பிக்கை குறைந்துள்ளமையே இடைவிலகல்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அரசாங்கத்தின் முயற்சிகள்
அத்துடன் இலவசப் பாடநூல்கள், சீருடைகள், பாடசாலை உணவு மற்றும் காப்புறுதி போன்ற பொருளாதாரத் தடைகளைக் குறைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகள் இருந்தபோதிலும், பல குடும்பங்கள் தொடர்ந்தும் குறிப்பிடத்தக்க நிதியியல் சுமைகளை எதிர்கொள்வதாக அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த காலங்களில் தேசிய அளவில் நிலவிய இடையூறுகளால் ஏற்பட்ட ஒழுங்கற்ற பாடசாலை நாட்காட்டியையும் சுட்டிக்காட்டிய குறித்த அறிக்கை இது பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துவதையும் ஒட்டுமொத்த கற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கல்விச் செயற்பாடுகளைச் சாதாரணமாக மாற்றுவதற்கும், பொது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும், கல்விச் சலுகைகளைத் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் சீரமைப்பதற்கும் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

