அனைத்து நிறைவேற்று அதிகாரமற்ற அரச ஊழியர்களின் சம்பளத்தை அடுத்த மாதம் முதல் 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனடிப்படையில், அண்மையில் அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா கொடுப்பனவுடன் ஒவ்வொரு ஊழியருக்கும் 15,000 ரூபா கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
அரசு ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்யவும் அவர்களது சம்பளத்தை அடுத்த வருடம் முதல் திருத்துவதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் உதய செனவிரத்ன தலைமையில் குழுவொன்று ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பள அதிகரிப்பு
இருப்பினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இந்த வருடம் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி குழுவிடம் பரிந்துரைத்துள்ளதுடன் இந்தக் குழுவும் மற்றும் நிதியமைச்சும் இந்தப் பிரேரணைக்கு மறுப்பு தெரிவித்திருந்த போதிலும் ஜனாதிபதி தனது கருத்தை மாற்றிக்கொள்ளவில்லை.
இதற்காக செலவிடப்படும் தொகையை ஏதோ ஒரு வகையில் மக்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் இல்லையேல் அடுத்த நான்கு மாதங்களுக்கு அதை செலுத்துவதில் சிக்கல் ஏற்படும் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், இது ஒரு துருப்புச் சீட்டு அதன் பலனை அடுத்து வரும் அரசாங்கம் சுமக்க வேண்டும் என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும் எனினும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அரசாங்கம் வரிகளை விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.