எம்வி எக்ஸ் – பிரஸ் பேர்ள் பேரழிவு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்ப்பின் கீழ் நிறுவப்பட்ட சுயாதீன இழப்பீட்டு ஆணைக்குழு
இன்னும் செயல்படத் தொடங்கவில்லை என்று, அதன் தலைவராக இருக்கும் ஓய்வுபெற்ற
உயர் நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர தெரிவித்தார்.
கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய 1 பில்லியன் டொலர்
இழப்பீட்டில் இருந்து, சேதங்களை மதிப்பிடுவதற்கும் பணம் செலுத்துவதற்கும்
பணிக்கப்பட்ட ஆணைக்குழு இன்னும் அமைக்கப்பட்டு வருகிறது.
டொலர் தவணை
முதலாவது 250 மில்லியன் டொலர் தவணையை செப்டம்பர் 23ஆம் திகதிக்குள் செலுத்த
உத்தரவிடப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கப்பல் தீப்பிடித்து கொழும்பில்
மூழ்கியதால் ஏற்பட்ட கடல்சார் பேரழிவு, கடல்சார் சுற்றுச்சூழல்
அமைப்புகளையும் கடலோர வாழ்வாதாரங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியது.
கடல் மற்றும் கடலோர மறுசீரமைப்பு குழு
இலங்கையின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் தீர்ப்புகளில் ஒன்றான உயர்
நீதிமன்றத்தின் தீர்ப்பு, கப்பலின் உரிமையாளர்கள், இயக்குனர்கள், உள்ளூர்
முகவர்களை கூட்டாகப் பொறுப்பேற்கச் செய்கிறது.
சுற்றுச்சூழல் மீட்சியை ஒரு தனி கடல் மற்றும் கடலோர மறுசீரமைப்பு குழு
மேற்பார்வையிடும்.
கப்பல் நிறுவனமான எக்ஸ்-பிரஸ் ஃபீடர்ஸ், 1 பில்லியன் டொலர் நட்ட ஈடு மிகையானது
என்று விமர்சித்ததுள்ளது.