இலங்கையின் துறைமுகங்களில் குறிப்பாக தென் ஆசியாவின் முன்னணி இடமாற்று மையமான கொழும்பு துறைமுகத்தை முன்னிலைப்படுத்தியே இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உலக வர்த்தகங்கள் இடம்பெற்று வருகின்றன என அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இலங்கை துறைமுக அதிகார சபையுடன், இலங்கை துறைமுகத்தைப் பற்றி அறிய ஆர்வமுள்ள 50க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் கலந்துகொண்ட அமெரிக்க வணிகத் துறையின் இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய போதே அமெரிக்கத் தூதர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன் போது, அமெரிக்க நிறுவனங்களுக்கு இலங்கை துறைமுகங்கள் தொடர்பில் அறியும் வாய்ப்பு கிட்டியது.
அமெரிக்க துறைமுகத் தொழில்நுட்பங்கள்
அத்தோடு மேம்பட்ட அமெரிக்க துறைமுகத் தொழில்நுட்பங்கள், இலங்கையின் சரக்கு கொள்ளளவையும் செயல்திறனையும் விரிவாக்க உதவியது.
அமெரிக்கப் பொருட்களை உலக சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டு செல்லச் செய்வது மற்றும் அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.