சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை பேச்சுவார்த்தைக்காக கொழும்பிற்கு
அழைத்திருந்த நிலையில் இருநாள் விடுமுறையில் கொழும்பிற்கு சென்று மீண்டும்
வருவேன் என மக்களிடம் உறுதியளித்து சென்றுள்ளார்.
இது தொடர்பாக பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்னை வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறே
கூறியுள்ளார்.
அர்ச்சுனாவின் உறுதிமொழி
ஆனால் இவ் விடயம் தொடர்பாக நாடாளுமன்றில் பேசி
முடிவெடுக்கப்படவுள்ள நிலையிலும், என்னோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தும்
முகமாகவுமே என்னை கொழும்பிற்கு அழைத்துள்ளனர்.
நான் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராகவே கொழும்பு
சென்று வரவுள்ளேன்.
ஆனால் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தானே வைத்திய அத்தியட்சகர் எனத்
தெரிவிக்கின்றார். அந்த முடிவை நீதிமன்றம் தான் எடுக்க வேண்டும்.
தற்போதும் சட்டப்படி நானே பதில் வைத்திய அத்தியட்சகர்.எனவே மக்கள்
பதற்றமடையவோ, குழப்பமடையவோ தேவையில்லை. மக்கள் என் மீது வைத்த அன்புக்கு
நன்றி.மீண்டும் வருவேன் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின் உறுதிமொழியை ஏற்ற பொதுமக்கள் வைத்தியரை
வழியனுப்பியதுடன் போராட்டத்தை நிறைவுக்கும் கொண்டு வந்திருந்தனர்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பூதாகரமாக வெடித்திருந்ததோடு, ஒருபுறம் மக்கள் போராட்டம் இடம்பெற -மறுபுறம் பதில் வைத்திய அத்தியட்சகரை வெளியேற்றுவதற்கான காய் நகர்தல்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.