மத்திய கிழக்கில் இடம்பெறும் மோதல்களினால் லெபனானில் (Lebanon) பாதுகாப்பு நிலைமை நிலையற்ற, தொடர்ச்சியான அவசர நிலையில் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு (Ministry of Foreign Affairs) தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளிவிவகார அமைச்சு இன்று (03) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை அமைப்புக்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருகிறது.
இலங்கையர்களுக்கு தேவையான உதவி
இலங்கையின் லெபனானுக்கான தூதுவர் கபில ஜயவீர (Kapila Jayaweera) மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த அவசர நிலைக்கு முகங்கொடுத்து, தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தங்குமிடங்களைப் பெற்றுள்ள, சில இலங்கையர்களைத் தவிர, இதுவரை எந்த இலங்கையர்களும் இந்நிலைமையால் பாதிக்கப்படவில்லை.“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலுக்குச் (Israel) செல்ல எவரேனும் தயாராக இருந்தால் அந்த வெளிநாட்டு பயணத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் யாரேனும் இஸ்ரேல், லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்பினால் வெளியுறவு அமைச்சகத்தை முழுமையாக தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.