Courtesy: Sivaa Mayuri
சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC ) மற்றும் ஆசிய ஒலிம்பிக் சம்மேளனம் (OCA) என்பன, இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு செலுத்தும் அனைத்து கொடுப்பனவுகளையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளன.
இருப்பினும், சர்வதேச ஒலிம்பிக் உதவித்தொகையிலிருந்து, பயனடையும் விளையாட்டு வீரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதில் அடங்காது என்று தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள்
இந்தநிலையி;ல், சர்வதேச ஒலிம்பிக் குழுவின், இந்த முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று தேசிய ஒலிம்பிக் குழுவின் சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதன் போது தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான தேர்தலை உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
குழுவின் தற்போதைய பதவிக்காலம் ஏப்ரல் 2026 இல் முடிவடைய உள்ள போதும் முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்கான திட்டம் நேற்றைய கூட்டத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை
இதன்படி ஐஓசியின் பரிந்துரைகளைப் பெற்ற பின்னர், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர், தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, இலங்கையின் தேசிய ஒலிம்பிக் குழுவின் நெறிமுறை குழு அறிக்கையின்படி, நெறிமுறைகள் மீறல்கள் மற்றும் நிதி தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பான பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன், தற்போதைய தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வாவை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறும் அந்த நெறிமுறை அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.