இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினால் மீண்டும் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உலகளவில் அதிக எண்ணிக்கையிலான காணாமல் போனவர்களைக் கொண்ட ஒரு நாட்டில் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் நாங்கள் உறுதியாக இருந்து வருகின்றோம்.
பலவந்தமாக காணாமல் போதல்கள் இலங்கை போன்ற நாடுகளிலுள்ள சமூகங்களை இலக்கு வைத்து இன ஒடுக்குமுறையின் கருவியாக மாறியுள்ளன.
ஈழத்தைப் பொறுத்தவரையில் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கவில்லை. எமது உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில இருந்தே இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட இன ஒடுக்குமுறையாக கருவியாக இதைப் பயன்படுத்தியுள்ளது.
இலங்கையின் இறுதிப்போரின் போது 146,679 பேர் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.