இலங்கையின் முன் பிள்ளை பருவக் கற்றல் அமைப்பை வலுப்படுத்தும் முக்கிய
நகர்வாக, முன்பிள்ளை பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு
(National Curriculum Framework) இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வி அமைச்சு வளாகத்தில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி
அமரசூரிய தலைமையில் இந்த வெளியீட்டு விழா இடம்பெற்றது.
புதிய கட்டமைப்பு
இதனை அடுத்து, தேசிய கல்வி நிறுவகம் (NIE) உருவாக்கியுள்ள இந்த புதிய
கட்டமைப்பு, நாட்டின் ஆரம்பகால கல்வி மையங்களுக்கு ஒரு சீரான, தேசிய ரீதியில்
அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நிறுவுவதன் மூலம், நிலவும் ஏற்றத்தாழ்வுகளை
நிவர்த்தி செய்வதனையும் சிறுவர்களின் முழுமையான வளர்ச்சியை மேம்படுத்துவதையும்
இலக்காக கொண்டுள்ளது.

பரந்த தேசிய கல்வி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்ட பாலர்
கல்வி தொடர்பான தேசிய கொள்கை 2027ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி
இதன் அமுலாக்கத்திற்கு முன்னோடியாக, அடுத்த வாரம் யுனிசெஃப் (UNICEF)
ஆதரவுடன் கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் தேசிய
கல்வி நிறுவகம் ஆகியன இணைந்து பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும்
நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளன.

