வடக்கு மாகாண வீதிப்போக்குவரத்து பொலிஸாரை அவர்களின் கடமை நேரத்தில்
இறுக்கமாக கண்காணிக்கும் பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத் திணைக்களத்தின் உதவியுடன், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த
வீரசூரியவால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த திட்டம் நேற்று
ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் நகர்வுகளையும், செயற்பாடுகளையும்
கண்காணிக்கும் விதமாகவும், சேவையைப் பரவலாக்கம் செய்யும் வகையிலும்,
கடமை நேர துஷ்பிரயோகங்களை தவிர்க்கும் வகையிலும் இந்த திட்டம் அமையும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிக்கண்காணிப்பு பொலிஸாரின் நகர்வுகள்
வீதிக்கண்காணிப்புப் பொலிஸாரின் நகர்வுகள் மற்றும் அவர்களின் இட அமைவுகள்
என்பவற்றை அலுவலகத் தில் அமர்ந்துகொண்டு திரையில் காணக்கூடியவாறு இந்த தொழில்நுட்பத்திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து பொலிஸார் ஓர் இடத்திலேயே நீண்ட நேரம் தரித்திருக்கின்றனர்
என்றும், அவர்கள் வாகன நெருக்கடி மிகுந்த பகுதிகளில் சேவையில் ஈடுபடுவதில்லை
எனவும் நீண்ட காலமாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எனவே இந்த
முறைப்பாட்டுக்கு நிரந்தர தீர்வைக்காணும் வகையில் இந்த திட்டம் அமையும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.