வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இன்று (22) காலை 10.30 மணியளவில் பிரதேச சபை தலைவரின் அலுவலகத்திற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் லசந்த விக்ரமசேகர உயிரிழந்திருந்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் கைத்துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான்கு குழுக்கள் விசாரணை
இந்த கொலைக்காக நான்கு தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இன்று தலைவரை பொது மக்கள் சந்திக்கும் நாள் என்பதால், பொதுமக்கள் அவரைச் சந்திக்க நேரம் வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற உடை மற்றும் கருப்பு நிற முகக்கவசத்துடன் சாதாரண நபரைப் போல உடையணிந்து வந்த துப்பாக்கிதாரி மக்களுடன் காத்திருந்துள்ளார்.

இதன்போது, பெண் ஒருவர் தலைவரின் அலுவலகத்திற்கு சென்று கடிதம் ஒன்றில் கையெழுத்தைப் பெற்று வௌியில் வந்த வேளை, துப்பாக்கிதாரி அலுவலகத்திற்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து துப்பாக்கிச்சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கிதாரி, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச்சென்றுள்ளார்.
இதனை அடிப்படையாகக்கொண்டு சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, நான்கு குழுக்கள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.

