யாழில் (Jaffna) ஊடகவியலாளர் மரியசீலன்
திலெக்ஸ் என்பருக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணை நேற்று (28) காலை 11 மணியிலிருந்து 1:00 மணிவரை மருதங்கேணி காவல்நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த ஒரு சில தினங்களிற்கு முன்னர் வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த
கடற்றொழிலாளி ஒருவர் கடலில் இடம் பெற்ற சம்பவம் ஒன்றின்போது காயமடைந்த
நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதேச வைத்தியசாலை
இந்தநிலையில், அந் நபரை பார்வையிடுவதற்காக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு சென்று
மருத்துவமனை உத்தியோகத்தர்களிடம் ஊடகவியலாளர்கள் அனுமதி கோரியுள்ளனர்.
மருத்துவமனை உத்தியோகத்தர்கள் பார்வை நேரத்திற்கு முன் விடுதியில்
நோயாளர்களை பார்வையிட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் பொறுப்பு மருத்துவரின்
அனுமதியை பெற்று காயமடைந்த நபரை பார்வையிடுமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஊடகவியலாளர் மரியசீலன்
திலெக்ஸ், சக ஊடகவியலாளர் ஒருவருடன் சென்று மருத்துவ
மனை பொறுப்பு மருத்துவரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
பொறுப்பு மருத்துவர்
இந்தநிலையில், பொறுப்பு மருத்துவர் ஊடகவியலாளர்களை பார்வை நேரத்திற்கு முன்
நோயாளியை பார்வையிட அனுமதிக்காத நிலையில் ஊடகவியலாளர்கள் வளாகத்திலிருந்து
வெளியேறியுள்ளனர்.
இருப்பினும், ஊடகவியலாளர்கள் தந்திரோபாயமாக மாற்று வழிகளை பயன்படுத்தி கடலில்
காயமடைந்தவர் தொடர்பான செய்தியை மருத்துவ மனையின் விடுதியில் தங்கியிருந்த
புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தனர்.
குறித்த செய்தியை பார்வையிட்ட பொறுப்பு மருத்துவர், ஊடகவியலாளர்
மரியசீலன் திலெக்ஸுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அனுமதி மறுப்பு
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (27) இரண்டு மணிநேரம் மரியசீலன்
திலெக்ஸ் மீது விசாரணைகள் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஊடகவியலாளர் மரியசீலன் திலெக்ஸ், தானும் தனது சக ஊடகவியலாளரும் குறித்த சம்பவ தினத்தில் செய்தி சேகரிப்பதற்கு
மருத்துவமனை அதிகாரிகளிடம் அனுமதி கோரியிருந்ததாகவும், அனுமதி மறுக்கப்பட்ட
நிலையில் தாம் மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மருத்துவர்
குற்றம் சாட்டியது போன்று எதுவும் இடம் பெறவில்லையென்றும், அனுமதி
மறுக்கப்பட்டதால் தாம் நாகரீகமாக வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொறுப்பு மருத்துவரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று சக
ஊடகவியலாளர்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.