யாழ்ப்பாணத்தில் (Jaffna) சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயம் குறித்து அதிபர் செயலகம் (Presidential Secretariat) அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, “சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சியான முறைகேடுகள் இடம்பெறுவதாக, அதிபர் செயலகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
வலுசக்தி அமைச்சுக்கு உத்தரவு
இதனைத் தொடர்ந்தே, இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்கு (Power Ministry) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழில் இயங்கும் பிராந்திய மின் இணைப்புப் பொறியியலாளர் காரியாலயத்தில் சூரியசக்தி இணைப்பு அனுமதிக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது முறைகேடான விதத்தில் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
அத்துடன் மிக நீண்டகாலமாக விண்ணப்பித்தவர்களின் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் செயலகம் உத்தரவு
இவை குறித்து மின்சாரசபையின் (CEB) பொது முகாமையாளருக்கு முறைப்பாடு செய்த வாடிக்கையாளர்கள் பழிவாங்கப்படுவதாகவும் அதிபரின் குறைகேள் அதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே குறித்த விடயம் தொடர்பில் சுயாதீன விசாரணைகளை மேற்கொண்டு, அறிக்கையிடுமாறு அதிபரின் செயலாளரால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.