செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக் பணிகளை
மேற்கொள்வதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.
நீதி மன்றம் இது தொடர்பில்
கரிசணையுடன் செயல்படுகின்ற போதும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தாமத நிலையை
ஏற்படுத்தியுள்ளது.
அகழ்வுப் பணி
செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப்
பணிகளுக்கு நிதி கிடைக்காமையால் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் 13 ஆம்
திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி மூன்றாம் கட்ட
அகழ்வுப் பணி தொடர்பில் யாழ் மாவட்ட நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுததுக்
கொள்ளப்பட்ட போதும் அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெறாமையால் அந்த வழக்கு 13 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியில் ஏற்கனவே இரண்டு கட்டமாக அகழ்வுப்
பணிகள் இடம்பெற்றுள்ளன. செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இரண்டு கட்ட
அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 239 எலும்புக் கூடுகளும், 72
சான்றுப் பொருட்களும் கிடைத்துள்ளன.
மேலும் அப் பகுதியில் மனித
எலும்புக்கூடுகள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப்
பணணி மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம்
குறித்த அகழ்வுப் பணியை மேலும் 8
வார காலம் மேற்கொள்ள சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருநத
போதும், அதற்கான பாதீடு அரசாங்கத்தால் ஒதுக்கப்படாமையால் வழக்கு
திகதியிடப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தில மனித உரிமை மீறல்கள், போர்குற்றங்கள்
இடம்பெற்றமைக்கான அதாவது இனப்படுகொலைக்கான ஒரு சாட்சியாக செம்மணி சித்துபாத்தி
மனிதப் புதைகுழியும் உள்ளது என பாதிக்கப்பட்ட தமிழ் தேசிய இனம் கூறி வரும்
நிலையில, அந்த விசாரணைகளை துரிதப்படுத்தி அகழ்வுகளை மேற்கொள்ள அரசாங்கம் அதிக
சிரத்தை காட்டாது காலத்தை இழுத்தடித்துச் செல்கின்றமை பாதிக்கப்பட்ட தமிழ்
மக்களிடம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செம்மணி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கத்திடம் தடயப்
பொருட்கள் மட்டுமன்றி சாட்சியமளிக்க தயாரான படைத் தரப்பை சேர்ந்தவர்களும்
உள்ளனர்.
குறிப்பாக மாணவி கிருசாந்தி கொலை வழக்கில் மரணதண்டனை கைதியாகவுள்ள
இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச செம்மணியில் 300- 400 பேர் கொல்லப்பட்டு
புதைக்கப்பட்டதாக அவர் முன்னர் தெரிவித்து இருந்ததுடன், செம்மணி புதைகுழி
குறித்து சாட்சியமளிக்க தான் தயார் என அவர் தனது மனைவி ஊடாக ஜனாதிபதி அநுர குமார
திஸாநாயக்கவிற்கு கடிதம் மூலமும் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்துக்கள்
அங்கு இடம்பெற்ற மனிதப் படுகொலைக்கான சாட்சியமாகவுள்ளது. அவரது சாட்சியங்களின்
அடிப்படையில் அதனுடன் தொடர்புடையவர்கள், அவர்களுக்கு கட்டளை பிறப்பித்தவர்கள்
என பலரை இனங்காணக் கூடியதாக இருக்கும்.
இலங்கை அரச படைகளின் வன்மத்தையும்,
அவர்களது கொடூர வெறியாட்டத்தையும் அதன் மூலம் வெளிப்படுத்த முடியும்.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி உள்ளுரில் மட்டுமன்றி சர்வதேச
மட்டத்திலும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுதியுள்ளது. ஐ.நாவிலும்
அது பேசு பொருளாக மாறியிருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும்
பிரித்தானியா இது தொடர்பில் கரிசணை செலுத்தி நீதியான முறையில் அகழ்வுப் பணி
இடம்பெறுவதுடன், நீதியான முறையில் விசாரணைகள் இடம்பெற வேண்டியதை
வலியுறுத்தியும் இருந்தனர்.
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய
நாடுகள் சபையின் 29 ஆவது அமர்வில் இலங்கை சார்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன
நாணயக்கார இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் விவகாரத்தில்
சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை
எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களின் நம்பிக்கை
ஆனால், ஐ.நாவில் கருத்து தெரிவித்து 10 நாட்கள் கடப்பதற்கு முன்னரே செம்மணி
வழக்கு மீண்டும் திகதியிடப்பட்டு அகழ்வுப் பணி தாமதமாகியுள்ளது.
நாட்டில்
குறிப்பாக தென்னிலங்கையில் ஊழலுக்கு எதிராகவும், போதைப் பொருள் மாபியாவுக்கு
எதிராகவும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள அரசாங்கம் தமிழ் தேசிய இனத்தின்
மாறாத வடுவாகவுள்ள செம்மணி சித்துபாத்தி விவகாரத்திலும் இதயசுத்தியுடன்
செயற்பட வேண்டும்.
அதுவே பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது
நம்பிக்கை வைக்க உதவும். கடந்த கால தமிழ் அரசியல் தலைமைகள் மீது கொண்ட
வெறுப்பால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கும்
கணிசமான வாக்குகளை வழங்கியிருந்தனர்.
தென்னிலங்கை கட்சிகள் வடக்கு – கிழக்கில்
இதுவரை பெற்றிராத வெற்றியை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில்
பெற்றிருந்தது.
அது அநுர அலையாக வந்த வாக்கு எனினும், வாக்களித்த தமிழ்
மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்.
அதற்கு குறைந்தபட்சம்
செம்மணி சித்துபாத்தி விவகாரத்தை என்றாலும் மனிதநேயத்துடன், இதயசுத்தியுடனும்
கையாண்டு பாதிககப்பட்ட மக்களுக்கு நீதியைப பெற்றுக் கொடுக்க முன்வரவேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு,
13 October, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.
<!–
இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,
–>