புதிய கூட்டுக்களால் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு
எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அந்தக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர்
எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்களை
யாழ்ப்பாணத்தில் நேற்று (19) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத்
தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இவ்வளவு காலமும் தாங்கள் மட்டுமே புனிதமானவர்கள் என்று தேர்தலில் போட்டி
போட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் நிலைமையை உணர்ந்து ஒரு சிலரோடு சேர்ந்து
தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேட்புமனு
இப்படியாகத்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கும்
ஒன்பது கட்சிகளின் கூட்டு, பத்து கட்சிகளின் கூட்டு எனப் பல கூட்டுகள் வந்தன. தப்பித் தவறி ஒருவர் மட்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வந்தார். எந்தவித
தாக்கத்தையும் இந்தக் கூட்டு செலுத்தாது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐந்து உள்ளூராட்சி சபைகளுக்கான
வேட்புமனுக்களை யாழ்ப்பாணத்தில் நேற்று தாக்கல் செய்திருக்கின்றோம்.
மிகுதி 12 சபைகளுக்கான வேட்புமனுக்களை இன்று காலை சமர்ப்பிப்போம்.
நிறைந்த போட்டியின் மத்தியிலே வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டியதாக
இருக்கின்றது. அதனால் சற்று நேரம் தாமதித்துத்தான் இறுதி செய்து
கொண்டிருக்கின்றோம்.
தேர்தல் முறைமை
கட்சியினுடைய தீர்மானத்தின் படி எந்த ஒரு சபைக்கும் மேயரோ, தலைவரோ, தவிசாளரோ
அறிவிக்கப்படப் போவதில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் அது சம்பந்தமாக கட்சி
முடிவு எடுக்கும்.

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிக்கிறோம். ஆனால்,
எல்லாருக்கும் தெரிந்த விடயம் இந்தத் தேர்தல் முறைமையில் எந்தக் கட்சியாக
இருந்தாலும் தனித்து ஆட்சியமைப்பது கடினமான விடயம்.
ஆனாலும், நாங்கள் முயற்சி
செய்கின்றோம்.
பெரும்பான்மை கிடைக்காத இடங்களில் அந்தந்தச் சபைகளில் வேறு யாருக்குப்
பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கின்றது என்பதைப் பொறுத்து நாங்கள்
தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

