தூய்மையான இலங்கை செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக யாழ். நகரப் பகுதி வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (3) நடைபெற்றுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்களுக்கு வெளியில் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்த
வர்த்தகர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் எச்சரிக்கை துண்டுகள்
விநியோகிக்கப்பட்டன.
அறிவுறுத்தல்
அத்துடன் போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பிலும்
வர்த்தகர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

யாழ். நகரிலுள்ள வர்த்தக நிலையங்களின் முன்பாக பொருட்களை வைத்து விற்பனை செய்ய வேண்டாம் எனவும், வர்த்தக நிலையத்தின் முன்பாகவுள்ள வடிகால்களை துப்புரவாக வைத்திருப்பது அந்தந்த வர்த்தக நிலைய உரிமையாளர்களின் பொறுப்பு எனவும் மாநகர சபை ஆணையாளர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்குச் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக நிலையங்களில் குப்பைகளைச் சேர்த்து வைக்குமாறும் தினமும் இரு தடவைகள் யாழ். மாநகர சபையால் அவை பெற்றுக்கொள்ளப்படும் என்றும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதேபோன்று வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக வாகனங்களை நிறுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனப் பொலிஸார் அறிவுறுத்தினர்.
கடைகளை அகற்ற நடவடிக்கை
எதிர்காலத்தில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கடைகளுக்கு பொருட்களை இறக்குவதற்கான நேரத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், நகரின் சில வீதிகளை ஒருவழியாக்குவதற்கும் இதன்போது ஆலோசிக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தைச் சூழவுள்ள பகுதிகளையும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பார்வையிட்டார்.
பேருந்து நிலையத்தைச் சுற்றி உட்புறமாக அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வடக்கு
மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாநகர சபை ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன்,
யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜயசிங்க, யாழ். பிராந்திய
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமஹா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



