ஒப்பந்த காலம் நிறைவடைந்தும் வெளியேறாமல், யாழ். தம்பாட்டி கடற்றொழில் கிராமிய
அபிவிருத்தி சங்கத்தின் கட்டடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும்
தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டம், நேற்றையதினம் (30.10.2025) குறித்த கட்டடத்திற்கு முன்பாக நடாத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, “தனியார் நிறுவனமே உடனடியாக
வெளியேறு, எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா, ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும்
வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடா, கடற்றொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே,
எமது கட்டடம் எமக்கு வேண்டும், கடற்றொழிலாளர்களுக்கு அநீதி இழைக்காதே” போன்ற கோஷங்களை
எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். 
இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய
அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில், 
“எமது சங்க கட்டடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5
வருடகால ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில்
2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது.
புதிதாக ஒப்பந்தம்
ஒப்பந்தகாலம் நிறைவடைந்து 2
வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை.
வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம்
ரூபா முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபா வாடகையும் தருவதாகவும் கூறினார்கள்.

நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம்.
ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால்
புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.






