யாழ் (Jaffna) கல்லுண்டாய் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, அவர்களது குடியேற்ற திட்டத்திற்கு அருகாமையில் இன்று (21) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், “கல்லூண்டாய் குடியேற்றத்திட்ட பகுதியில் ஜே/135, ஜே/136 என இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன.
மக்கள் பாதிப்பு
ஆனால் மொத்தமாக 88 குடும்பங்கள் தான் வசிக்கின்றன. ஜே/135 கிராம சேவகர் பிரிவில் சுமார் 27 குடும்பங்கள் தான் உள்ளன. ஏனையோர் ஜே/136 கிராம சேவகர் பிரிவில் தான் உள்ளனர்.
இரண்டு கிராமங்களையும் பிரிப்பதற்கு, சண்டிலிப்பாய் பிரதேச செயலரின் அனுமதியுடன், ஜேர்மனியை (German) சேர்ந்த பெண் ஒருவரின் நிதியில் கட்டடம் ஒன்று கட்டப்படுகிறது. இந்தக் கட்டடம் ஜே/135 பகுதியைச் சார்ந்ததாகவே உள்ளது. இதனால் ஜே/136 பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டடம் யாருக்காக, எந்த நோக்கத்திற்காக, எந்த நிர்வாகத்தின் கீழ் கட்டப்படுகின்றது என்ற எதுவும் எமக்கு தெரியாது. இதுகுறித்து கிராம சேவகரை கேட்டபோது, அது சம்பந்தமான எந்தவொரு உத்தியோகபூர்வ தகவலும் தனக்கு வழங்கப்படவில்லை என கூறுகிறார்.
சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரே இதில் தலையிட்டு குழப்பத்தை ஏற்படுத்துகின்றார். கிராம சேவகரா சமுர்த்தி உத்தியோகத்தரா என்ற குழப்பத்தில் நாங்கள் உள்ளோம்.
சமுர்த்தி உத்தியோகத்தர்
இரண்டு பகுதி மக்களும் சந்தோஷமாக இருந்தோம். ஆனால் சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் இரண்டு பிரிவு மக்களையும் பிரித்து பிரச்சினையை உண்டாக்குகின்றார்.
சமுர்த்தி உத்தியோகத்தர் தனது அலுவலகத்தில் இருக்காமல் ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள சில பெண்களின் வீடுகளுக்குள் இருந்து கதைத்துக்கொண்டு இருக்கின்றார். ஏதாவது தேவைக்கு அலுவலகத்துக்கு சென்றாலும் அங்கு சமுர்த்தி உத்தியோகத்தர் இல்லை.
அவருக்கு இடமாற்றம் கிடைத்தும் கூட அவர் செல்லாமல் இருக்கின்றார். இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் இணைத்து சந்தோஷமாக செயற்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், போராட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தி, கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.