சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் (Jaffna) நீரில் மூழ்கியுள்ள நிலையிலும், யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) முழுமையான சேவையை வழங்குவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathyamoorthy) தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து ஐபிசி தமிழ் ஊடகம் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம்.
மக்களுக்கான சேவை
இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடமைக்கு வந்துள்ளார்கள். ஆகையால் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுகின்றன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. அந்த வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
அனர்த்தம் காரணமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவையான சிகிச்சை
அத்துடன் எதிர்காலத்தில் டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியசாலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். ஆகையால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
வைத்தியசாலை ஊழியர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களது வரவு குறைவாக இருக்கும் என்ற அடிப்படையில் தியேட்டர்களின் சேவைகள் அல்லது சத்திரசிகிச்சைகள் இடம்பெறாது என அறிவித்திருந்தோம்.
இருப்பினும் அவர்கள் கடமைகளுக்கு வந்துள்ளதால் சேவைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெறும்.
பிரதான சத்திர சிகிச்சை கூடத்தில் எட்டு சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அந்த அனைத்து பிரிவுகளிலும் வழமை போல சத்திர சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. எனவே மக்கள் வழமை போல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்