முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற செய்தியாளர் ஒருவருக்கு செய்தி சேகரிக்க பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
இளம் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் பஸீர் முஹம்மது என்பவருக்கே அவரது கடமையைச் செய்யவிடாமல் மேற்கண்டவாறு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த செய்தியாளர் சுமார் 13 வருடங்களாக நீதிமன்ற செய்தியாளராக இருக்கும் நிலையில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டை வைத்திருந்த செய்தியாளர்களுக்கு மாத்திரமே நீதிமன்றத்தினுள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி சேகரிக்க தடை
இதன்போது செய்தியாளர் பஸீர் முஹம்மது, அரசாங்க தகவல் திணைக்கள அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதற்கான ஆவணங்களையும் உடனடியாக வட்சப் மற்றும் ஈமெயில் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
எனினும் பஸீர் முஹம்மத் கடைசி வரை நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.