யாழில் ஊடகவியலாளர் வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்பது
அவரது ஊடகப்பணியை அச்சுறுத்தலுக்குள்ளாக்கி அவரை அடிபணிய வைக்கும்
நடவடிக்கையே என கிளிநொச்சி ஊடக அமையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இத் தாக்குதல்
முயற்சிக்கு ஊடக அமையம் தனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (13) அதிகாலை புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊடகத் தொழில்
இதனை கண்டித்து கிளிநொச்சி ஊடக அமையம் வெளியிட்ட செய்தி குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இச் செய்திகுறிப்பில்
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
”இலங்கையை பொறுத்தவரை ஊடகவியலாளர்கள்
தங்களது கடமைகளின் பொருட்டு அதிகளவு சவால்களையும், நெருக்கடிகளையும்
எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்கின்ற
நெருக்கடிகள் என்பது மிக மோசமானதாக காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள்
இவற்றையெல்லாம் கடந்து தங்களது கடமைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
சட்ட நடவடிக்கை
ஊடகத் தொழில் என்பது முக்கியமாக பிராந்திய செய்தியாளர்களின் பொருளாதார நிலைமை என்பது கவலைக்குரியது. அவர்களுக்கு ஊடகத் தொழில் மூலம் கிடைக்கின்ற பொருளாதார நன்மை சொற்பமானதே.
இந்த நிலையில் அவர்கள் மீது
தாக்குதல் மேற்கொண்டு அவர்களது சொத்துக்களுக்கு அழிவை ஏற்படுத்தி
அச்சுறுத்தும் செயற்பாடுகள் மன்னிக்க முடியாத நடவடிக்கைகள் ஆகும். இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும்.
அத்தோடு இத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு
அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சட்டநடவடிக்கை என்பது இனிவரும் காலங்களில்
இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாதிருப்பதனை உறுதி
செய்வதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக அமைய
வேண்டும்“ என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.