ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு 2025 ஜனவரி 27 ஆம் திகதி சட்டமா அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சட்டமா அதிபர் இன்று (13) கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
அத்துடன் லசந்த விக்ரமதுங்கவின் வழக்குடன் தொடர்புடைய மூன்று பேரின் விடுதலைக் கடிதம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது நாளை கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்புடைய வழக்கில் மூன்று பேரை விடுவித்து சமீபத்தில் அனுப்பப்பட்ட கடிதம் திரும்பப் பெறப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று காலை அறிவித்திருந்தது.
இதேவேளை லசந்த கொலை வழக்கில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரி உட்பட மூன்று நபர்களை விடுவிப்பது குறித்த சட்டமா அதிபரின் பரிந்துரை சமூகத்தில் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

