காலாகாலமாக ஏமாற்றப்பட்டு வரும் பிராந்திய ஊடகவியலாளர்களின் வீடமைப்பு, ஓய்வூதியம் போன்ற பொது நலனில் ஜனாதிபதி கவனம் செலுத்தி தீர்வை வழங்க வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்கப் பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழிற்சங்கத்தின் அதியுயர்பீட கூட்டம் இன்று 2025.11.05 ஆம் திகதி புதன்கிழமை கல்முனை வடக்கு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் தலைவர் எஸ்.லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
அதன்போது உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீண்ட கால வரலாற்றை கொண்ட எமது தொழிற்சங்கம் தொழிற்சங்க உறுப்பினர்கள் கீழ்நிலை ஊழியர்கள் உட்பட சமூகத்திலேயே இருக்கின்ற பல்வேறுபட்ட நபர்களின் பல்துறை சார்ந்தவர்களினதும் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து பல்வேறு இன்னல்களையும் ஏமாற்றங்களையும் அடைந்து வந்த நிலையில் தொடர்ந்தும் நாம் எமது உறுப்பினர்களுக்கும் அரச துறை சார்ந்த வேறு திணைக்கள உறுப்பினர்களுக்கும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றோம்.
ஆட்சிக்கு தொழிற்சங்கங்களின்
இப்போதுள்ள அரசாங்கம் சிறப்பாக இயங்கி வருகின்ற நிலையில் தோழர் அநுர குமார திசாநாயக்கவின் கைகளை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம்.

ஏனென்றால் அவர் போதை வஸ்து ஊழல் மற்றும் நிர்வாக துஷ்பிரயோகங்கள் என்பவருக்கு எதிராக மிகச் சிறப்பாக நாட்டை முன் கொண்டு
செல்கின்ற ஒரு தலைவராக காணப்படுகின்றார்.
எனவே தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கத்திற்கு எமது சங்கம், நாங்கள் அவரோடு இணைந்து எதிர்காலத்தில் தொடர்ந்தும் சேவையாற்றுவதற்கு தீர்மானித்து இருக்கின்றோம்.
கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனை எமது தொழிற்சங்கத்தின் போசகராக நியமித்திருக்கின்றோம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
பல அரசியல்வாதிகள் எங்களை ஏமாற்றினார்கள். அரசியல்வாதிகளுக்கு நாங்கள் ஏணியாக இருந்தாலும் எங்களுக்கு அவர்கள் பல்வேறு துரோகங்களை கடந்த காலங்களிலே செய்து வந்திருக்கின்றார்கள்.

அதுபோன்று கடந்த காலங்களிலே பல உயர் அதிகாரிகளும் எங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் நாங்கள் முன்வைக்கின்ற கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் புறந்தள்ளினார்கள்.
இவர்களை நாங்கள் சட்டப்படி அணுகி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் எமது சங்கத்தினுடைய பல்வேறு பிரச்சினைகளுக்கும் உறுப்பினர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை கண்டு வந்திருக்கின்றோம் என்றார்.
இந்த உயர் பீட கூட்டத்திற்கு தொழிற்சங்க செயலாளர் எஸ்.யு. சந்திரிக்கா உட்பட உயர்பீட உறுப்பினர்கள் ஆலோசகர்கள் ஊடக இணைப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

