மன்னார் பொது வைத்தியசாலையில் மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில்
மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணத்துக்கு நீதி கோரி மன்னார் (Mannar) பொது
வைத்தியசாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம் பெற்று வருகின்றது.
குறித்த போராட்டமானது, இன்று (20) மாலை 4.30 மணியிலிருந்து இடம் பெற்று வருகின்றது.
தாயின் மரணத்துக்கு நீதி வழங்கவேண்டும், தவறு செய்தவர்கள் கைது
செய்யப்படவேண்டும், வைத்தியசாலை நிர்வாகம் மாற்றப்படவேண்டும் போன்ற பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராட்டம் இடம் பெற்று வந்துள்ளது.
கலகம் அடக்கும் காவல்துறையினர்
அதனை தொடர்ந்து
போராட்டத்தின் போது பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்ட நிலையில்
வைத்தியசாலைக்குள் போராட்டகாரர்கள் நுழைய முற்பட்ட நிலையில் கலவரம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கும் மக்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்ட நிலையில்
கலகம் அடக்கும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டனர்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான
குழுவினர் இறந்த பெண்ணின் பெற்றோரிடம் கலந்துரையாடிய போதும் சுமூகமான நிலை
ஏற்படவில்லை.
கொட்டும் மழையில்
போராட்டகாரர்கள் தொடர்ந்தும் கொட்டும் மழையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கும்
முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்ட களத்திற்கு வடமாகாண சுகாதாரப்பணிப்பாளர் சமன்பத்ரன வருகை தந்து பிரச்சினை தொடர்பில் இதற்கான நீதியை பெற்று தருவதாக தெரிவித்தார்.
இதன் போது மக்கள் நீங்கள் கூறியதை எழுத்து மூலம் எழுதி தருமாறு கேட்டுக்கொண்டனர்.
இதேவேளை,மன்னார் பொது வைத்தியசாலையில் (Mannar Hospital) நேற்றைய தினம் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம் தாயின் சடலம் மேலதிக பிரேத பரிசோதனைக்காக யாழ்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான இளம் தாய் வேனுஜா திருமணமாகி 10 வருடங்கள் பிள்ளை இல்லாத நிலையில் நேற்றைய தினம் (18) பிரசவத்திற்காக மன்னார் மகப்பேற்று விடுதியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் போது பிள்ளையும் தாயும் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.