கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 89 வயது முதியவரை கடத்திச்சென்றதாக கூறப்படும் பெண் ஒருவரை பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று (1) உத்தரவிட்டுள்ளார்.
89 வயதான குறித்த நபர் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில் இலங்கை திரும்பியுள்ளதுடன், இலங்கைக்கு வந்த பின்னர் தன்னை கவனித்துக்கொண்டதாக கூறப்படும் 58 வயதுடைய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இவ்வாறு திருமணம் செய்துக்கொள்ளப்பட்ட பெண் கொழும்பு ஜாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணையில் வெளியான தகவல்
இந்நிலையில், கணவரை சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணும், உறவினர்கள் உள்ளிட்ட சிலரும் அவரை அந்த வைத்தியசாலையில் இருந்து அழைத்துச் சென்று தனியார் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் நாரஹெபிட்ட பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், அவரது மரணத்தின் பின்னர், குற்றம் சாட்டப்பட்ட பெண் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களால் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கடத்தல் இடம்பெற்றதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரான பெண்ணுக்கு பிணை
குறித்த பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டது குடும்பத்தில் எவருக்கும் தெரியாது எனவும், அவர் இறந்த பின்னர் இறுதிக் கிரியைகளை செய்துள்ளதாகவும் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு உண்மைகளையும் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபரான பெண்ணுக்கு பிணை வழங்கியுள்ளார்.