முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாளான இன்றைய (13) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் இரண்டு மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வாய்வின், ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.
ஒன்பதாம் நாள் அகழ்வாய்வு
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ
தலைமையிலான குழுவினர்
தடயவியல் காவல்துறையினர், உள்ளிட்ட தரப்பினரின் பங்குபற்றுதல்களுடன் இந்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றன.
இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்
அந்தவகையில் தொடர்ச்சியாக இடம்பெறும் அகழ்வாய்வுப் பணிகளில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளிலிருந்து இவ்வாறு இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகளும் ஒரு சயனைட் குப்பியும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டுகட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை 7 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 47 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவ் அகழ்வுப் பணிகள் ஒரிரு நாட்களில் நிறைவுபெறும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.