கொட்டாஞ்சேனை 99 அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முன்னாள் இராணுவ கமாண்டோ என்றும் இவர் தற்போது கூலிக் கொலையாளியாக செயற்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
12 பேர் கைது
அதன்படி, சம்பந்தபட்ட கொலை தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்த காரின் சாரதி, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு தங்குமிடம் வழங்கிய நபர், சாரதிக்கு தங்குமிடம் வழங்கிய மேலும் இரண்டு நபர்கள் மற்றும் ஆதரவு அளித்த நபர்கள் அடங்குவர் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
கொலை ஒப்பந்தம்
கடந்த 7 ஆம் திகதி இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், கொட்டாஞ்சேனை, கல்லூரித் தெரு, 16வது வீதியில் வசிக்கும் புத்திக பெர்னாண்டோ என்பவர் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மஹியங்கனை பகுதியில் மறைந்திருந்தபோது துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒரு கூலி கொலையாளி என்றும், பழனி ரெமோஷன் என்ற நபர் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தின் பேரில் இந்தக் கொலையை செய்தாகவும், அதற்காக ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற்றிருப்பதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

