மாத்தறை பிரதேச காணி கொள்வனவு வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்வரும் விசாரணை திகதியில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த காணி கொள்வனவு தொடர்பான வழக்கு நேற்று (25) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வழக்கில் மூன்றாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச உடல்நிலை சீரற்று இருப்பதன் காரணமாக அமெரிக்காவில் இருந்து மருத்துவ அறிக்கையை சட்டத்தரணிகள் ஊடாக, நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.
காணி கொள்வனவு வழக்கு
இதையடுத்தே, எதிர்வரும் விசாரணை திகதியில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தில் காணியொன்றினை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அந்த காணியானது கனடாவில் வசிக்கும் பசில் ராஜபக்சவின் மனைவியின் சகோதரியின் பெயரில் ஜேர்மன் பிரஜை ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணியை கொள்வனவு செய்வதற்கு அவரது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், பணம் எவ்வாறு பெறப்பட்டது என்பதை அவர்கள் நிரூபிக்கத்தவறிய காரணத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.