அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில்
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதாநாயகன் வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு, நேற்றையதினம்(10.01.2025) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன்
வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
வாய்ப்பு
அத்துடன், எங்களுடைய மாகாணத்தில் விளையும் நெல் வேறு
மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அதிகரித்த விலையில் மீண்டும் எமது
மாகாணத்துக்கு கொண்டு வரப்படுகின்றமையை தவிர்ப்பதற்காக எமது அரிசி ஆலை
உரிமையாளர்களுக்கு அதற்குரிய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இதேவேளை, கூட்டுறவுச் சங்கங்கள் ஊடான நெல் கொள்வனவுக்குரிய நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன்
குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு
மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், இலங்கை மத்திய வங்கியின் வட பிராந்திய முகாமையாளர் பகீரதி செந்தில்மாறன், அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் மற்றும்
அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.