கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி, மத்துகம பிரதேசத்தில் மறைந்திருக்க அப்பிரதேசத்தின் முக்கிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் உதவியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த பாதாள உலகக்குழு உறுப்பினர், கெஹெல்பத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாகவும் அந்த நட்பின் காரணமாகவே இஷாரா செவ்வந்திக்கு மறைந்து கொள்ள தேவையான வசதிகளை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி, சுமார் ஒரு மாத காலமாக மதுகமவில் தங்கியிருந்து தனது தோற்றத்தை மாற்றவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பத்மேவுடன் நட்பு
மத்துகம பகுதியில் உள்ள பல இரகசிய இடங்களில் மறைந்திருக்க தேவையான வசதிகளை மத்துகம பாதாள உலகத் தலைவர் அவருக்கு வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இஷாரா செவ்வந்தி மத்துகம பிரதேசத்தில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு சோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறி மாத்தறைக்கு தப்பிச் சென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மாத்தறையில் சில நாட்கள் கழித்த பிறகு, அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று, அங்கிருந்து கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை, கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிரதானமாக செயல்பட்டதாகக் கருதப்படும் இஷாரா, உட்பட நான்கு சந்தேகநபர்களும் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/P2H4JIFB8q8

