முன்னாள் ஜனாதிபதியும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்சவுக்கு(mahinda rajapaksa) ஏதேனும் ஏற்பட்டால் அதற்கு இந்த அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என சட்டத்தரணி மனோஜ் கமகே(Manoj Gamage) காட்டமாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமைக்கு எதிராக ரொஸ்மிட் பிளேஸில் உள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று(31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்த
கமகே மேலும் உரையாற்றுகையில், இந்த நாட்டில் முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக 2 ஜீப் வண்டிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டி என்பன வழங்கப்பட்டுள்ளன.
சிலரது விருப்பத்தினால் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது
முறையான பாதுகாப்பு மதிப்பீட்டின் ஊடாக 2020 மார்ச் 19 ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை முடிவுகளை மாற்றுவது சட்டவிரோதமானது என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.