வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு
முல்லைத்தீவு கடற்கரைப் பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை
வழங்கமுடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
தெரிவித்துள்ளார்.
அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை,
மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான்மை இனத்தவர்கள்
அங்கிருந்து வெளியேற வேண்டுமெனவும் எச்சரித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் நேற்றையதினம் (25.06.2025) இடம்பெற்ற
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அபிரிவிருத்திக்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற் பகுதியற்ற பிரதேசம்
குறித்த கூட்டத்தில் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தாம்
கடற்றொழில் மேற்கொள்வதற்கு நாயாறுப்பகுதியில் இறங்குதுறை வழங்குமாறு அனுமதி
கோரியிருந்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்கிளாய்தொடக்கம், பேப்பாரப்பிட்டிவரைக்குமான பகுதியே முல்லைத்தீவு
மாவட்டத்தின் கரையோரப் பகுதியாகும். இந்த கரையோரப் பகுதிகளிலேயே
கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வெலிஓயா பிரதேசம் என்பது கடற் பகுதியற்ற ஒரு பிரதேசம். இந்நிலையில் தமிழ்
மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டு அங்கு அத்துமீறிக் குடியிருக்கின்ற
பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்களும் கடற்றொழில் செய்வதற்கு இறங்குதுறை
கேட்டால், கடலைப் பிரதானமான வாழ்வாதாரமாக நம்பி வாழும் கடற்றொழிலாளர்கள்
எங்கு செல்வது.
தமிழ் மக்களின் காணி
கடல் பகுதியே இல்லாத வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கின்றவர்களை
கடற்றொழிலாளர் சங்கமாகப் பதிவு செய்தது யார். அவர்கள் நன்நீர்
மீன் பிடிச்சங்கமாகப் பதிவுசெய்யப்பட்டிருப்பின் கடலில் இறங்குதுறை
கேட்க முடியாது.
கடந்த 1984ஆம் ஆண்டிற்கு பிற்பாடு தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து,
தமிழர்களது பூர்வீக மணலாற்றை வெலி ஓயாவாக மாற்றி அங்கு அத்துமீறித்
தங்கியிருக்கும் பெரும்பான்மையினத்தவர்கள், தமிழ் மக்களிடம் காணிகளை
ஒப்படைத்துவிட்டு அங்கிருந்துவெளியேற வேண்டும்.
வெலிஓயா பகுதியில் அத்துமீறிக் குடியிருக்கும் பெரும்பான்மை
இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாயாற்றில் இறங்குதுறை வழங்குவதற்கு ஒருபோதும்
அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.