மன்னார் மாவட்டத்துக்குரிய துறைமுகம் பேசாலையில் அமைக்கப்படவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
தலைமையில் மன்னார் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (24.06.2025) மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த
கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்த கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,
“கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது
பற்றியும் பேசப்பட்டது. அதற்குரிய நடவடிக்கையை கடற்படையினர் எடுப்பார்கள் என்ற
நம்பிக்கை உள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு
மன்னார் மாவட்டத்துக்கென துறைமுகமொன்று கிடையாது. எனவே, பேசாலையில்
துறைமுகமொன்றை அமைப்பதற்கு திட்டமிட்டு, அதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது.
எனினும், குறித்த துறைமுகம் தொடர்பில் மக்கள் மத்தியில் சந்தேகம் உள்ளது.

அந்த
சந்தேகத்தை நாம் நீக்க வேண்டும். அரசாங்க அதிபர், அதிகாரிகள் உள்ளிட்டோர்
மக்களை சந்தித்து கலந்துரையாடி, துறைமுகத்தின் முக்கியத்துவம் பற்றி
விளக்கமளிக்க வேண்டும்.
அதேவேளை, இந்திய கடற்றொழிலாளர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது. இந்தியகடற்றொழிலாளர்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு கடற்றொழிலாளர்கள் கோரிக்கை
விடுத்தார்கள். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு
கடற்படையினரும் உரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்திய
கடற்றொழிலாளர்களின் வருகையை முற்று முழுமையாக நிறுத்த முடியும் என நம்புகின்றோம்.
இராஜதந்திர மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.” என குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, வடக்கு, கிழக்கில்
கடற்றொழிலாளர்களை சந்தித்து வருகின்றோம். மாவட்ட, மாகாண மட்டத்தில் பிரச்சினைகள்
தீர்க்கப்பட்டு வருகின்றன.
மன்னார், பேசாலையில் 2026இல் கடற்றொழில் துறைமுகம் அமைக்கப்படும். இதற்கு உலக
வங்கி ஆதரவு பெறப்படும். அதேபோல கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
தீர்க்கப்படும்.” என்றார்.






