மன்னார்(Mannar)- தாழ்வுபாடு பகுதியில் காற்றாலை மின்சாரத்திற்கான கடற்கரை வீதி புனரமைப்பு வேலை திட்டத்தின் போது பலன் தரும் மரங்கள் வேரோடு பிடுங்கி வீசப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்திற்கு எதிராக நேற்றையதினம் அந்த பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
வேலைத்திட்டம்
தாழ்வுபாடு கடற்கரையில் அமைந்துள்ள மணல் திட்டுகளில் மணல் எடுக்கப்பட்டு வீதியின் அருகில் கொட்டப்பட்டுள்ளமை தொடர்பில் கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மன்னார் பிரதேசச் செயலாளர், மன்னார் பிரஜைகள் குழு மற்றும் அருட்தந்தையர்களின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் மற்றும் அருட்தந்தையர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை அவதானித்ததோடு, உடனடியாக குறித்த வேலைத்திட்டத்தை இடை நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் சம்பவ இடத்திற்குச் சென்று நிலமையை ஆராய்ந்துள்ளார்.
இதன்போது, குறித்த பகுதியில் மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டுள்ள நிலையில் கடற்கரை மணல் திட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தினால் அகழப்பட்டு வீதிக்கு அருகில் கொட்டப்பட்டுள்ள நிலையில் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் விசனம்
குறித்த பகுதியில் காற்றாலை மின்சாரம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் தொடர்பாகவே குறித்த வீதி புனரமைக்கப்படுவது குறித்தும் மக்கள் இதன்போது விசனம் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை(3) இடம்பெற உள்ள மன்னார் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் ஆராயப்பட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அங்கு வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றதோடு, குறித்த வேலைத்திட்டமும் இடை நிறுத்தப்பட்டுள்ளது.