முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் (S. Viyalendiran) வீட்டின் முன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் வரை மட்டக்களப்பு (Batticaloa) நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (19.05.2025) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 21ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் அமைச்சரின் மெய் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய பாலேந்திரன் என்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதையடுத்து மெய் பாதுகாப்பு உத்தியோகத்தரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை
இதனை தொடர்ந்து இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான பிரபல சட்டத்தரணிகளான ந.கமலதாஸ், வி.சுதர்ஷன் ஆகியோர் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தப்படவில்லை என தொடர்ந்து ஆட்சேபித்து வந்தனர்.

மேலும் உயிரிழந்த நபரின் பெற்றோரும் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு இந்த விசாரணையை மாற்றுமாறு சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குறித்த விசாரணையை கொழும்பு குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வந்த நிலையில் அமைச்சரின் வாகன சாரதியான தம்பான் என்றழைக்கப்படும் தனுசன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு நீதவான்
இந்த நிலையில் குறித்த வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று (19.05.2025) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கைது செய்யப்பட்ட அமைச்சரின் மெய்பாதுபாப்பு உத்தியோகத்தர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.
இதையடுத்து குறித்த வழக்கு ஜூன் மாதம் 16 ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டு அடுத்த வழக்கிற்கு சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
You May Like This
https://www.youtube.com/embed/gKYteG4d8yY

