அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் உதய ஆர். செனவிரத்ன (Udaya R. Seneviratne) குழு சமர்பித்த அறிக்கையின் பிரகாரம், பாரிய சம்பள அதிரிகப்பை உள்ளடக்கியதாக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட திறைசேரியால் தயாரிக்கப்பட்டுவருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardana) தெரிவித்துள்ளார்.
கொழும்பு – பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரச துறையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை மறுசீரமைப்பதற்கான நிபுணர் குழு அரச மற்றும் தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 உறுப்பினர்களை உள்ளடக்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் திகதி அமைச்சரவை அனுமதியுடன் நியமிக்கப்பட்டது.
இறுதி அறிக்கை
இதன் படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கடந்த மூன்றாம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த அறிக்கை தொடர்பில் மக்கள் சந்திப்பொன்றில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட தொகை
அதன் போது, அரச ஊழியர்களின் பாரிய சம்பள அதிகரிப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை தொடர்பான தரவுகளை அடுத்த மாதம் அச்சிடப்பட்டு வெளியிடப்படவுள்ள வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டு ஆவணத்தில் காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசியல் வாக்குறுதி தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை உடனடியாக மீளப்பெறுமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.