பல அத்தியாவசிய பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்படும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) இன்று (16) தெரிவித்தார்.
இந்த நாட்டில் நுகர்வோர் பாரியளவில் சுரண்டப்படுவதாகவும், நுகர்வோர் விவகார அதிகார சபை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிகபட்ச சில்லறை விலை
தற்போது பல பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நுகர்வோர் அதிகாரசபையின் நுகர்வோர் பேரவை செயற்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் வசந்த சமரசிங்க, கூடிய விரைவில் விலை மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
40 ரூபாவிற்கு விற்கப்படும் தற்போதைய தண்ணீர் போத்தல்100 ரூபாவிற்கும் 52 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் உப்புப் பொதி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பல உணவுப் பொருட்கள்
நுகர்வோர் விவகாரங்களின்படி, இந்த அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்ட பொருட்களில் ரொட்டி, குடிநீர் போத்தல்கள், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, பல உணவுப் பொருட்கள், அரிசி, கொத்து உள்ளிட்ட பேக்கரி பொருட்களும் அடங்கும்.