அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பதவிப்பிரமாணம் இன்று (21.08.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனமானது இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலிசாஹிர் மௌலானா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அலிசாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக கடந்த 16.08.2024ஆம் திகதி அறிவித்திருந்தார்.
அலிசாஹிர் மௌலானா உள்ளிட்ட குழுவினர் கடந்த 16ஆம் திகதி கொழும்பு பிளவர் வீதியில் உள்ள ஜனாதிபதியின் அரசியல் அலுவலகத்திற்கு சென்று ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து உத்தியோகபூர்வமாக இதனை அறிவித்தனர்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர, நாடாளுமன்ற உறுப்பினர்களான வஜிர அபேவர்தன, எஸ்.எம்.எம். முஷர்ரப், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடிவேல் சுரேஷ்
மேலும், தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று பதவிப்பிரமானம் செய்துக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் வடிவேல் சுரேஷ் பதவிப்பிரமானம் செய்துக்கொண்டார்.