வரலாறு மற்றும் தொல்பொருள் பாடங்களை பாடசாலைக் கல்வி முறையில் கட்டாயப் பாடங்களாகப் பேண வேண்டும் என்று அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுடன் (Dayasiri Jayasekara) கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,
2026 முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து தற்போது பல்வேறு சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழுந்துள்ளது.
கட்டாயப் பாடமாக இருப்பது அவசியம்
இதற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

புதிய கல்விச் சீர்திருத்தத்திற்கு அமைய 10 மற்றும் 11 ஆம் தரங்களில் கட்டாயப் பாடங்களிலிருந்து வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் நீக்கப்பட்டு, அவை தெரிவு செய்யப்படும் பாடப் பட்டியலில் சேர்ப்பதற்கே இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், உத்தேச கல்வி மறுசீரமைப்பு குறித்து கவலைகளை வெளியிட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், அவை மாணவர்களின் சுமைகளைக் குறைப்பதற்கு பதிலாக அதிகரிக்கும் எனவும் கூறுகிறது.
சாதாரண தரத்தில் வரலாறு கட்டாயப் பாடமாக இருப்பது அவசியம் என்று அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் தென்னிலங்கை பிரதம சங்கநாயக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், வரலாற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தேரர்கள் குழுவொன்று, இன்று அஸ்கிரிய மகாநாயக்க தேரரைச் சந்தித்து குறித்த பாடப் பிரச்சினை குறித்து கலந்துரையாடி உள்ளனர்.

