தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மஞ்சள் அனகொண்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் நிர்வாக பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அனகொண்டாவை தேடுவதற்காக பகல் மற்றும் இரவு நேர தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளது
இந்தநிலையில் நேற்று (16) இரவு நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அனகொண்டா கூண்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனகொண்டாவின் கூண்டில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக அது சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனகொண்டா குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சள் அனகோண்டா
மேலும் உலகின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்றான மஞ்சள் அனகோண்டா தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது.

இந்த மஞ்சள் அனகொண்டா உட்பட மூன்று பாம்பு இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகளை பெண் ஒருவர் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டு வந்தார்.
இதன்போது, குறித்த பாம்புகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

